ரஃபேல் தொடர்பாக இந்தியாவுக்கு வழங்கப்பட வேண்டிய தொழில்நுட்பங்களை விற்பனையாளர்கள் வழங்காமல் இருப்பதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஃபேல் விமானத்தை தயாரித்து வழங்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், அதற்கான ஏவுகணைகளை தயாரித்து வழங்கும் எம்பிடிஏ நிறுவனமும், அந்த தளவாடங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை இன்னும் வழங்க வேண்டியுள்ளது என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில், ''ரஃபேல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் மற்றும் எம்பிடிஏ ஆகிய நிறுவனங்கள் ரஃபேல் விமானம் மற்றும் அதில் பொருத்தும் ஏவுகணை ஆகியவை தொடர்பான உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புக்கு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அவை இன்னும் வழங்கப்படவில்லை.
அதேபோல், இலகுரக போர் விமானமான தேஜஸ் விமானத்துக்குரிய எஞ்ஜினை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பிரான்ஸ் நிறுவனம் இன்னும் வழங்க வேண்டியுள்ளது.
ரஃபேல் ஒப்பந்தப்படி, அந்த விமானம் மற்றும் அதற்கான ஏவுகணைகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை பெறுவதில் உரிய பலன் கிடைக்கவில்லை.
எனவே, அந்தத் தொழில்நுட்பங்களை பெறுவது தொடர்பான கொள்கை மற்றும் அதன் அமலாக்கம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய உயர் தொழில்நுட்பங்களுக்கான தடைகளைக் கண்டறிந்து உரிய தீர்வு காண வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.