சர்ச்சையாகிய ஐரோப்பிய எம்.பி.க்களின் வருகை: ஏற்பாடு செய்த என்ஜிஓ பெண்..!

சர்ச்சையாகிய ஐரோப்பிய எம்.பி.க்களின் வருகை: ஏற்பாடு செய்த என்ஜிஓ பெண்..!
சர்ச்சையாகிய ஐரோப்பிய எம்.பி.க்களின் வருகை: ஏற்பாடு செய்த என்ஜிஓ பெண்..!

ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் இந்தியா வருவதற்கு அழைப்பு விடுத்தவர், தனியார் தொண்டு நிறுவன பெண் என்பது தெரியவந்துள்ளது. 

ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்கள் குழு இந்தியா வந்துள்ளது. இந்தக் குழு பிரதமர் மோடியை சந்தித்ததோடு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம், அரசு அதிகாரிகள் காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து விளக்கினர். 

இந்நிலையில் ஐரோப்பிய எம்பிக்களின் இந்திய சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தை மாடி சர்மா என்ற இந்திய வம்சாவளி பெண் ஏற்பாடு செய்துள்ளார். இவர் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ்(Brussels) நகரில், பெண்கள் நலன் தொடர்பாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்திய சுற்றுப்பயணம் குறித்து மாடி சர்மா ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்களுக்கு அனுப்பிய அழைப்பிதழ் மின்னஞ்சலை ‘தி இந்து’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

(மாடி சர்மா)

அதன்படி, மாடி சர்மா 30 ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்களுக்கு அளித்துள்ள அழைப்பிதழில், “நான் இந்திய பிரதமர் மோடியுடன் உங்களுக்கு ஒரு முக்கியமான சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தற்போது இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றியை பெற்று உள்ளார். அத்துடன் அவர் தனது வளர்ச்சி சார்ந்த திட்டங்களை மீண்டும் தொடர உள்ளார். இதன் காரணமாக அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் வலிமையான தலைவர்களான உங்களை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆகவே இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சந்திப்பின் போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

மாடி சர்மாவின் ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பிரஸ்ஸல்ஸ் நகரில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் என்றும், அவர் ஒரு சர்வதேச தொழில் தரகர் என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பிய நாடாளுமன்ற எம்பிக்களின் வருகையை மத்திய வெளியுறுவுத் துறை ஏற்பாடு செய்யவில்லை என்று வெளியுறுவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com