உத்தராகண்டில் புஷ்கர் சிங் தாமி; கோவாவில் பிரமோத் சாவந்த் - அரசியல் குழப்பத்துக்கு முடிவு

உத்தராகண்டில் புஷ்கர் சிங் தாமி; கோவாவில் பிரமோத் சாவந்த் - அரசியல் குழப்பத்துக்கு முடிவு
உத்தராகண்டில் புஷ்கர் சிங் தாமி; கோவாவில் பிரமோத் சாவந்த் - அரசியல் குழப்பத்துக்கு முடிவு

உத்தராண்ட் மற்றும் கோவாவில் நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அம்மாநிலங்களின் முதல்வர்களாக முறையே புஷ்கர் சிங் தாமி, பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உத்தராகண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 57 தொகுதிகளை பாஜக கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

எனினும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட புஷ்கர் சிங் தாமி, தான் போட்டியிட்ட கட்டிமா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனால் முதல்வர் பதவியை புஷ்கர் சிங் தாமிக்கு வழங்குவது தொடர்பாக பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வந்தது. இதனிடையே, முதல்வர் பதவிக்கும் மேலும் சில தலைவர்கள் போட்டியிட்டதால் அங்கு குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், உத்தராகண்டில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களிடம் இந்த விவகாரம் தொடர்பாக கட்சி தலைமை இன்று ஆலோசனை நடத்தியது. இதில் பல எம்எல்ஏக்கள் புஷ்கர் சிங் தாமி முதல்வராக வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர். மேலும், அவருக்காக தங்கள் தொகுதிகளை காலி செய்யவும் பெரும்பாலான எம்எல்ஏக்கள் முன்வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, புஷ்கர் சிங் தாமியை உத்தராகண்ட் முதல்வராக பாஜக தலைமை அறிவித்துள்ளது. அவர் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும், புஷ்கர் சிங் தாமி தேர்தலில் தோல்வி அடைந்ததால், முதல்வராக பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள்ளாக ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.

கோவாவில்...

இதேபோல, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற போதிலும், அங்கு முதல்வர் பதவிக்கு பிரமோத் சாவந்துக்கும், எம்எல்ஏ விஷ்வஜி ராணேவுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. ஏற்கனவே, முதல்வராக இருந்த பிரமோத் சாவந்த் தான், தற்போதைய தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு கடுமையாக பணியாற்றி வந்ததாக கட்சி தலைமையிடம் கோவாவின் புதிய எம்எல்ஏக்கள் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி, பிரமோத்துக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவும் பக்கபலமாக இருந்தது. இதையடுத்து, அவரையை கோவா முதல்வராக தேர்வு செய்து பாஜக தலைமை இன்று அறிவித்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com