உத்தராகண்ட் மாநில பாஜக சட்டப்பேரவை தலைவராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் திரிவேந்திர ராவத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதிற்கிணங்க அவர் கடந்த மார்ச் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் முதல்வரின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்ததையடுத்து, மாற்றத்தை தலைமை விரும்பியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினரான அவர், முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமானால் செப்டம்பர் 10ம் தேதிக்குள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் கடந்த 3 நாட்களாக கட்சியின் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் தீரத் சிங் ராவத். பதவியேற்ற 6 மாதங்களில் எம்.எல்.ஏ ஆக முடியாத சூழல் நிலவுவதால் தீரத் சிங் ராவத் பதவி விலகவேண்டும் என கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் பதவியேற்ற 4 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய முதலமைச்சரை தேர்வுசெய்ய இன்று டேராடூனில் பாஜக எம்எல் ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், உத்தராகண்ட் மாநில பாஜக சட்டப்பேரவை தலைவராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.