போதைப் பொருள் விவகாரம்: தெலுங்கு நடிகர்-நடிகைகளிடம் விசாரணை தொடக்கம்
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர், நடிகைகளிடம் இன்று முதல் விசாரணை தொடங்குகிறது.
போதை பொருள் கடத்தல் தொடர்பாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். போலீசார் பியூஸின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான நடிகர், நடிகைகள் எண்கள் இருந்தன. இந்த விவகாரத்தில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று ஆஜராகி விளக்கமளிக்கும் இயக்குநர் புரி ஜெகநாத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். நாளை நடிகை சார்மியும், நாளை மறுநாள் முமைத்கானும் ஆஜராக உள்ளனர். போதைப் பொருள் விவகாரத்தில் மேலும் சில நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.