அறுவடையை கொண்டாடும் லோஹ்ரி.. பஞ்சாப், ஹரியானா, டெல்லி மக்களின் பண்டிகை!
லோஹ்ரி என்ற பெயரில் பஞ்சாபிகளின் அறுவடை திருவிழா செவ்வாயன்று பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. லோஹ்ரி பண்டிகையின் சிறப்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லோஹ்ரி என்ற பெயரில் பஞ்சாபிகளின் அறுவடை திருவிழா செவ்வாயன்று பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. லோஹ்ரி பண்டிகையின் சிறப்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். உணவின் ஆதாரமாகத் திகழும் தானியங்களின் அறுவடை திருவிழாவாகவும் குளிர்காலம் விடைபெறுவதும் லோஹ்ரி பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இது பஞ்சாபிகளுக்கே உரிய பூர்வீகத் திருவிழாவாகும். லோஹ்ரி பண்டிகையின்போது காலை ஐந்தே முக்கால் மணிக்கு தெருக்களில் தீ மூட்டி அதைச்சுற்றி குழுமி மக்கள் உற்சாகமாக பாரம்பரியமான பாங்க்ரா, கித்தா நடனங்களை ஆடுவர். தமிழகத்தில் போகி பண்டிகையின்போது தீ மூட்டி பழைய பொருட்களை எரிப்பது போன்றதொரு பண்டிகைதான் இது என்றாலும், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய பொருட்களை தீயில் எரிப்பதில்லை. தீயை வழிபடும் விதத்தில் எள், வேர்க்கடலை, பொரி, வெல்லம் ஆகியவற்றை தீயில் இட்டு வழிபடுகின்றனர். இதன்மூலம் கர்மா அழிந்து புதிய வாழ்வு பிறப்பதாக கருதுகின்றனர்.
கடுகு கீரை, சோளமாவில் தயாரிக்கப்படும் ரொட்டி போன்ற உணவுகளை லோஹ்ரியின்போது உண்டு மகிழ்கின்றனர். குறிப்பாக, எள் மற்றும் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் லட்டுகளையும் லோஹ்ரியின்போது வடமாநிலத்தவர்கள் உண்கின்றனர். தமிழகத்தில் போகி பண்டிக்கைக்கு அடுத்து பொங்கல் விழா என்பதுபோல வடமாநிலங்களில் லோஹ்ரிக்கு அடுத்தநாள் மகரசங்கராந்தியாக கொண்டாப்படுகிறது. மாநிலங்களுக்கு ஏற்றார்போல பண்டிகைகளுக்கு வேறு பெயர்கள் இருக்கலாம். ஆனால், இந்த மண் தரும் அறுவடையை கொண்டாடும் ஒற்றுமைதான் பண்டிகையின் மையக்கருத்தாக இருக்கிறது.

