300 கிமீ பயணம் செய்து டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட பஞ்சாப் மாணவிகள்
50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பஞ்சாபின் கிஷன்கரில் இருந்து 300 கி.மீ தூரம் பயணித்து, திக்ரி எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் இணைந்து போராடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் கிஷன்கரிலிருந்து திக்ரி எல்லையில் தங்கள் பள்ளி சீருடையுடன் போராடும் இந்த மாணவர்கள், பெரும்பாலும் ஹோலி ஹார்ட் சீனியர் மேல்நிலைப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த பள்ளியின் நிர்வாக இயக்குனர் ரஞ்சீத் கவுர் “ எங்கள் பள்ளியில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர், மாணவர்கள் பொது போக்குவரத்து மற்றும் பிற வழிகளில் இனிவரும் நாட்களில் போராட்டத்திற்கு வருவார்கள். நாங்கள் மாணவிகளை மட்டும் ஒரு பேருந்தில் அழைத்து வந்தோம், இவர்கள் குறைந்தது இரண்டு-மூன்று நாட்களுக்கு இங்கு தங்கியிருப்பார்கள்,” எனக்கூறினார்
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி அஷ்தீப் கவுர் பேசும்போது “ எங்கள் குடும்பத்தினர் இந்த மசோதாக்களுக்கு எதிரானவர்கள், ஏனெனில் இந்த சட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்குத்தான் பயனளிக்கும் மற்றும் மண்டி முறையை முடிவுக்குக் கொண்டுவரும்" என்றார்.
மற்றொரு மாணவி ஜஸ்பிரீத் கவுர் “எனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் நான் இந்த போராட்டத்துக்கு வர முடிவு செய்தேன். சட்டம் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் இங்கேதான் இருப்போம்" என்று அவர் கூறினார். போராட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் உங்களின் படிப்பு தடைபடுமே என்று கேள்விக்கு, "அனைவருக்கும் உணவு கொடுக்கும் விவசாயிகளுக்காக இங்கு இருப்பது மிகவும் முக்கியமானது" என்று கூறினார்.