காரின் கூரை மீது பெண்ணை கட்டியெடுத்து சென்ற போலீஸ் - வைரலாகும் வீடியோ
பெண்ணை காரின் கூரை மீது கட்டிச்சென்று கீழே தள்ளிய காவல்துறையினருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள சவிந்தா தேவி கிராமத்தில் சொத்து தகராறு தொடர்பான புகார் ஒன்று காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புகார் கொடுக்கப்பட்ட நபரைத் தேடி காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அந்த நபர் இல்லை. இதனால் வீட்டிலிருந்த பெண்களுடன் காவல்துறையினர் அத்துமீறிப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு பேசுவதை கேள்வி கேட்ட பெண் ஒருவரை காவல்துறையினர் அடித்து, தங்கள் கார் மீது கயிற்றால் கட்டியுள்ளனர். அந்தப் பெண், புகார் கொடுக்கப்பட்ட நபரின் மருமகள்.
இதைத்தொடர்ந்து அந்தப்பெண்ணை காரில் மீது கட்டியவாறே, கிராமத்தை காவல்துறையினர் சுற்றி வந்துள்ளனர். அந்தப் பெண் அச்சத்தில் அலறியுள்ளார். இதனால் அங்கிருந்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர். ஆனாலும் அந்தப் பெண்ணை அவர்கள் கீழே இறக்கிவிடவில்லை. பின்னர் வேகமாக காரில் செல்லும்போது, அப்பெண்ணின் கையில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அறுத்துள்ளனர். இதனால் அப்பெண் காரில் இழுந்து விழுந்துள்ளார். விழுந்தவுடன் அப்பெண் அங்கிருந்து அச்சத்துடன் எழுந்து ஓடுகிறார். அவர் விழுந்ததை அறிந்தும், காவல்துறையினர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர்.