நாற்காலியில் அமர்ந்த குற்றவாளிகள் : சர்ச்சையில் சிக்கிய போலீஸ்
பஞ்சாப்பில் குற்றவாளிகள் புகைப்படம் எடுக்கும்போது நாற்காலியில் அமரவைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சில குற்றவழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். வழக்கம் போல அவர்களை ஊடங்களுக்காக புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது கவனக்குறைவில் குற்றவாளிகளுக்கு நாற்கலிகளை வழங்கியுள்ளனர். அவர்களும் நாற்காலிகளில் ஒய்யாரமாக அமர்ந்து போஸ் கொடுத்தனர். அப்படியே அது புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குற்றவாளிகள் நாற்காலியில் அமரவைக்கப்பட்டது தவறான முறை என்பதை உணர்ந்த காவல்துறையினர், அவர்களை தரையில் அமர வைத்து மீண்டும் ஒருமுறை புகைப்படம் எடுத்துள்ளனர். இருப்பினும் குற்றவாளிகள் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் பஞ்சாப்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கவனக்குறைவால் நடந்தது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.