"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
தனது மகனை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுவிட்டதாக ஐஏஎஸ் அதிகாரி குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் கழிவு நீரகற்று வாரியத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்தவர் சஞ்சய் போப்லி. கழிவு நீர் குழாய் பதிக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.7 லட்சம் லஞ்சத்தை சஞ்சய் போப்லி கேட்டதாக தெரிறது. இதுதொடர்பான வீடியோவை ஒப்பந்ததாரர் சென்ற வாரம் வெளியிட்டார். இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 20-ம் தேதி அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சஞ்சய் போப்லியையும் அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம், ஏராளமான வெள்ளிப் பொருட்கள், லட்சக்கணக்கிலான ரொக்கம் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சஞ்சய் போப்லியின் மகன் கார்த்திக் போப்லி துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது மகன் கார்த்திக்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லி குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எங்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவர்கள் ஜோடித்திருக்கும் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள கூறி என்னையும், எனது குடும்பத்தினரையும் துன்புறுத்தினர். அப்போது எனது மகனை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். எனது கண் முன்னே மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இதற்கு நானே நேரடி சாட்சியாக இருக்கிறேன்" என்றார். ஐஏஎஸ் அதிகாரியின் இந்தக் குற்றச்சாட்டு பஞ்சாப் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை சண்டிகர் எஸ்எஸ்பி குல்தீப் சாகல் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு அறையில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டிருக்கிறது. அங்கு சென்று அவர்கள் பார்க்கையில், சஞ்சய் போப்லியின் மகன் கார்த்திக் போப்லி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது தந்தையின் கைத்துப்பாக்கி மூலமே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சஞ்சய் போப்லி கூறுவது உண்மையல்ல" என்றார்.