பஞ்சாப் மாநிலத்தில் சிறு, குறு விவசாயிகளின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து முதலமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டார்.
இதுகுறித்த அறிவிப்பினை சட்டப்பேரவையில் வெளியிட்டு பேசிய அவர், 5 ஏக்கர் வரை விவசாய நிலங்களைக் கொண்ட சிறு மற்றும் குறு விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், மற்ற குறு விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த கடன் தள்ளுபடியால் மாநிலத்தில் உள்ள 18.5 லட்சம் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த 10.25 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறிய அவர், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார். உத்தரப்பிரதேசம் மற்றும் மகராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. பஞ்சாபில் நலிவடைந்துள்ள விவசாயிகளுக்கு உதவும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய பொருளாதார நிபுணர் டி.ஹேக் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையின்படி விவசாயக் கடன்களை அம்மாநில அரசு தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது.