வீரர் குடும்பத்திற்கு கூடுதலாக மாதந்தோறும் 10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர்
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு மாநில அரசின் சார்பில் மாதந்தோறும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து கடந்த வியாழன் கிழமை 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பயணம் செய்தனர். அப்பொழுது, திடீரென ஆதில் என்ற பயங்கரவாதி மூலம் ராணுவ வீரர்கள் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசு நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறி வருகிறது. அந்த வகையில், புல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் மாநிலம், அனந்பூர் சாஹிப் பகுதியை சேர்ந்த வீரப் குல்விந்தர் சிங் வீ்ட்டுக்கு பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் சென்றார். குல்விந்தர் சிங்கின் பெற்றோர் மற்றும் மனைவிக்கு ஆறுதல் கூறி, மாநில அரசின் சார்பில் 7 லட்சம் ரூபாய் கருணைத்தொகையும், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலமும் அளித்தார். மேலும், குல்விந்தர் சிங்கின் மனைவிக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.