புனே | பேருந்துக்குள் பெண் பாலியல் வன்புணர்வு.. சந்தேக நபர் புகைப்படம் வெளியீடு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேயின் ஆள் நடமாட்டம் அதிகம் நிறைந்த பகுதியான ஸ்வார்கேட்டில் 26 வயது நிறைந்த இளம்பெண் ஒருவர், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அதிகாலை பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது 36 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர், அங்கிருந்த விளக்கில்லாத பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து அந்தப் பெண் தனது தோழிக்கு தகவல் அளித்ததன்பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், அவரது பெயர் தத்தாத்ரயா ராம்தாஸ் கடே (36) என தெரிய வந்தது. தற்போது அவரைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து அந்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே அவரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என புனே காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தவிர, அவருடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். ”குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நபர் மீது ஏற்கெனவே 6 வழக்குகள் உள்ளன. புனே மற்றும் அஹில்யாநகர் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை மற்றும் சங்கிலி பறிப்பு ஆகிய குற்றச்செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், 2019இல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்” என போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் மாநில அரசைக் கடுமையாகச் சாடி வருகின்றன.