புல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படம் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போது பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கானின் புகைப்படத்தின் மேல் காகிதம் ஒட்டி, அவரது படம் மறைக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை நிரந்தரமாக நீக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சங்கம் ஆலோசித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் சங்கம் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் புல்வாமாவில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையை சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்திய அளவில் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பயங்கரவாதிகளுக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

