கல்வித்துறையை மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி - நாராயணசாமி குற்றச்சாட்டு
மாநிலத்தில் கல்வித்துறையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயல்வதாக பாண்டிச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுவை பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் என்டி மகாலில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, மத்திய அரசு மாநில கல்வித்துறையை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதில் தனக்கு மாறுப்பட்ட கருத்து உள்ளது என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் "கல்வியை மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இந்தியாவில் பல சமுதாயங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் உள்ளது. இங்கு ஒரு முறையை மட்டும் கடைபிடிக்க முடியாது. ஆகவே, கல்வி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்." என்றார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் பள்ளிக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என முதல்வர் நிதியில் இருந்து வழங்குவேன் என்று கூறினார். மேலும், தனியார் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் புதுச்சேரியில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.