திமுக - காங். கூட்டணி |தமிழ்நாட்டில் ஓய்ந்தாலும்; புதுச்சேரியில் இழுபறி.. என்ன நடக்கிறது?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ஆனால், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் கூட்டணிக்கான தலைமை யார் என்பதிலும், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதிலும் தொடர்ந்து இரு கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வந்தபோதிலும், திமுகவால் அதன் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதேசமயம், 39 + 2 தொகுதிகள் கேட்கப்பட்டு வந்தது. ஆனால், 25 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்ற திமுகவின் நிலைபாடு காரணமாக, இக்கூட்டணி முறிவை நோக்கிச் செல்வதாக பார்க்கப்பட்டது.
இந்த சூழலில்தான், காங்கிரஸ் - திமுக மூத்த நிர்வாகிகளின் பேச்சுவார்த்தை காரணமாக, 28 +1 என்ற குறைவாக தொகுதிப் பங்கீட்டிலேயே திமுக கூட்டணியில் தற்போது இணைந்திருக்கிறது காங்கிரஸ். இதன் காரணமாக, புதுச்சேரியிலாவது கடந்த தேர்தலைப்போல அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இதைத்தொடர்ந்து, அங்கு 18 - 20 தொகுதிகளில் போட்டியிட முனைப்பு காட்டுகிறது. ஆனால், அங்கு 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக தலைமையிலே கூட்டணி அமைய வேண்டும் என திமுக தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது.
கடந்த 2021 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 15 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதைக் காரணமாகக் கொண்டே புதுச்சேரியில், திமுக தலைமையிலேயே கூட்டணி தொடரும் என அக்கட்சியின் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும் எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் தெரிவித்து வருகிறார். அதேபோல, விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் திமுக தலைமையிலேயே கூட்டணி தொடர வேண்டும் என விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், 20 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அழைப்பு இல்லாமலேயே புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அறிமுகக் கூட்டம் என ஜெகத்ரட்சகன் கூறினாலும் காங்கிரஸ் அழைப்பில்லாமல் பேச்சுவார்த்தை நடத்தியது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், கடந்த இரண்டு மாதங்களாகவே ஜெகத்ரட்சகன் மற்றும் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்களில் ஸ்டாலின் ஆட்சியை, குறிப்பாக திராவிட மாடல் ஆட்சியை புதுச்சேரியிலும் கொண்டு வருவோம் எனப் பேசி வருவது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதையடுத்து, புதுச்சேரியில் யார் தலைமையில் கூட்டணி என்ற போட்டி உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த சூழலில்தான், புதுச்சேரி மாநிலத்திலும் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிரிஷ் சோடங்கர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளார்.
இன்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபட்ட சோடங்கர், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த ஏழு பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர், திமுக தலைமையில் கூட்டணி என்பதுபோல புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதுதான் பாரம்பரியமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும், யார் முதல்வர் வேட்பாளர் என்பதை புதுச்சேரி மக்களே முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு, தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தாலும், புதுச்சேரியில் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு முடிவடைவதற்கு தமிழ்நாட்டைப்போலவே இரண்டு கட்சியின் தலைமை நேரடியாக பேசினால்தான் சுமுகமாக முடிவடையும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

