புதுச்சேரியில் சிறுமி கொடூரமாக கொலை; வலுக்கும் மக்கள் போராட்டங்கள் - அரசியல் கட்சி தலைவர்கள் ஆதங்கம்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.
புதுச்சேரி மாயமான சிறுமி சடலமாக மீட்பு
புதுச்சேரி மாயமான சிறுமி சடலமாக மீட்புPT WEB

புதுச்சேரி சோலை நகர்ப் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்துத் தேடிவந்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் அந்த சிறுமி தெருவில் தனியாக நடந்து செல்வது மட்டும் பதிவாகி இருந்தது. சிறுமி, முத்தியால் பேட்டை எல்லைப் பகுதியைக் கடக்கவில்லை என்பதை உறுதி செய்த காவல் துறையினர், வீடு வீடாகச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சிறுமி காணாமல் போன 72 மணி நேரத்திற்குப் பிறகு நேற்று முன் தினம் அம்பேத்கர்நகர் வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்ட மூட்டையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து உடலை அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் காவல்துறையினர்.

ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த உறவினர்கள்!

அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமி உயிரிழப்பு தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில், ஒரு முதியவர் மற்றும் மூன்று இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

புதுச்சேரி மாயமான சிறுமி சடலமாக மீட்பு
படித்தது ப்ளஸ் 2.. பார்த்தது எம்.பி.பி.எஸ் மருத்துவம்.. கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

இதைத் தொடர்ந்து கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி கிழக்குக் கடற்கரைச்சாலை முத்தியால் பேட்டை அருகே 300க்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கருணாஸ் (19) என்ற இளைஞரும், விவேகானந்தன் (59) என்ற முதியவரும் கைதாகியுள்ளதாகத் தெரிகிறது. இவர்களில் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடிவந்ததாகச் சொல்லப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை செய்த போது உயிரிழந்த சிறுமி

இவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும், அதில் சிறுமி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்போது வரை கடத்தல் வழக்காக இருந்த இந்த வழக்கு, போக்ஸோ வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தற்போது வரை சிறுமியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், தொடர்ந்து பல போராட்டங்களைச் செய்து வந்தனர்.பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை பிறகு சிறுமியின் உடலைப் பெற்றுச் சென்றனர்.

புதுச்சேரி மாயமான சிறுமி சடலமாக மீட்பு
 பூப்பறிக்கச் சென்று கிணற்றில் தவறி விழுந்த பெண்- 32 மணி நேரத்திற்குப் பிறகு சடலமாக மீட்பு

”மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை..” தவெக தலைவர் விஜய் கண்டனம்

இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

”போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது” - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்

புதுச்சேரி மாநிலம், 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி , கொடூர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு , கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவே இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கவும் வலியுறுத்துவதுடன். பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

”பேரதிர்ச்சியையும், பெரும்வேதனையையும் தருகிறது” - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

"புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடூரமாக கொலை செய்த கொடூரர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்! புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சியையும், பெரும்வேதனையையும் தருகிறது. பெற்ற மகளை இழந்து ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் சிறுமியின் பெற்றோரை என்ன வார்த்தைகள் சொல்லித் தேற்றுவதென்று தெரியவில்லை. இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, குழந்தையை இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

”இரும்புக்கரம் ஒடுக்க வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் ஒடுக்க வேண்டும். யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி மாயமான சிறுமி சடலமாக மீட்பு
புதுச்சேரி: 80 வயது மூதாட்டி படுகொலை... வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியது காவல்துறை

”நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்” - மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கண்டனம்

”எங்கே போகிறோம்! புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்தப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது.

சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

”மனவேதனை அளிக்கிறது” - திமுக எம்.பி கனிமொழி இரங்கல்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. குழந்தைகளுக்கு எதிராக தொடரும் இத்தகைய சம்பவங்கள், மனிதகுலத்தையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன. மகளைப் பறிகொடுத்து, மீளமுடியாத துயரில் தவிக்கும் அப்பெற்றோரின் கரங்களைப் பற்றிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com