புதுச்சேரி: திரைமறைவு அரசியலில் என்ன நடக்கிறது?

புதுச்சேரி: திரைமறைவு அரசியலில் என்ன நடக்கிறது?
புதுச்சேரி: திரைமறைவு அரசியலில் என்ன நடக்கிறது?

புதுச்சேரி அரசியல் வரலாற்றில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 22 நாட்களாக எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்க முடியாத நிலை உள்ளது. திரைமறைவில் நடப்பது என்ன?

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாரதிய ஜனதா 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சரவையில் துணை முதல்வர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என பாரதிய ஜனதா தலைமை திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் முதலமைச்சராக பொறுப்பெற்ற ரங்கசாமி இன்று வரை அதுதொடர்பாக எந்தவித பதிலும் கூறவில்லை. துணை முதல்வர் பரிந்துரை மற்றும் அமைச்சர்கள் பட்டியலையும் ஆளுநருக்கு கொடுக்கவில்லை.

இதற்கிடையே கடந்த 7-ந் தேதி முதலமைச்சராக பதவி ஏற்ற ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 9 ந் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து கடந்த 17ந்தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இருப்பினும் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். லெட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக பரிந்துரை செய்து முதல்வர் ரங்கசாமி, அதற்கான கோப்பை துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பினார்.

முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்தபடி லெட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக நியமித்து துணை நிலை ஆளுநர் கடந்த 21ந்தேதி உத்தரவிட்டார். ஆளுநர் உத்தரவு வெளியானால் அடுத்த சில மணி நேரங்களில் தற்காலிக சபாநாயகர் பதவி ஏற்பது மரபாக இருந்து வந்த நிலையில் அறிவிப்பானை வெளியாகி 4 நாட்கள் ஆகியும் இதுவரை தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படாமல் உள்ளார். அவர் பதவி ஏற்றால் தான் எம்.எல்.ஏக்கள் முறைப்படி பதவி ஏற்றுக்கொள்வார்கள்.

பாரதிய ஜனதா கேட்கும் துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் ரங்கசாமி திணறுவதாக கூறப்படுகின்றது. ஆனால் அவர் இதுவரை மவுனமாகவே உள்ளார். திரைமறைவில் என்னதான் நடக்கின்றது என்பது மர்மமாகவே உள்ளது. திரைமறைவில் இரு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் பல்வேறு வியூகங்களை அமைத்து வருகின்றனர். அது இருகட்சிகளிடையே இணக்கமான சூழல் இல்லாததையே காட்டுகிறது. கொரோனா நோய் தாண்டவம் ஒருபக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களின் குறைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் திண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com