புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும், ஆறு சுயேட்சை எம்.எல்.ஏக்களும்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும், ஆறு சுயேட்சை எம்.எல்.ஏக்களும்!
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும், ஆறு சுயேட்சை எம்.எல்.ஏக்களும்!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பிடிக்க போட்டா போட்டி போட்ட நிலையில் அவர்களிடமிருந்து சாதுர்யமாக வெற்றியை தட்டி பரித்துள்ளனர் ஆறு சுயேட்சை வேட்பாளர். இந்த ஆரும் பேரும் தற்போது எம்.எல்.ஏவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

‘புதுச்சேரியில் எப்போதுமே கட்சி, சின்னம் என்பதையெல்லாம் கடந்து மக்களிடையே அதிகம் பரிசயமானவர்களுக்கு தான் வாக்குகள் விழும்’ என அரசியல் பிரமுகர்கள் சொல்வதுண்டு. இந்த நிலையில் புதுச்சேரி தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆறு சுயேட்சை வேட்பாளர்கள் எம்.எல்.ஏவாக தேர்வாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் எத்தனை தொகுதிகள்?

புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டப்பேரவை தொகுதிகள். இதில் 23 தொகுதிகள் புதுச்சேரி பிராந்தியத்திலும், 5 தொகுதிகள் காரைக்கால் பிராந்தியத்திலும், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் தலா ஒரு தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகளிலிருந்து தான் ஆறு சுயேட்சைகள் எம்.எல்.ஏவாகி உள்ளனர். 

யார் அந்த ஆறு சுயேட்சை வேட்பாளர்கள்?

உருளையன்பேட்டை தொகுதி - நேரு என்கிற குப்புசாமி 

புதுச்சேரி நகர பகுதியில் அமைந்துள்ள தொகுதி உருளையன்பேட்டை. பேருந்து நிலையம், அண்ணா சாலை, குபேர் பஜார் என அங்காடிகள் அதிகம் நிறைந்த தொகுதி. இந்த தொகுதியில் திமுக சார்பில் கோபால் போட்டியிட்டார். முன்னாள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நேரு என்கிற குப்புசாமி சுயேட்சையாக களம் கண்டார். அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் வெளியான தேர்தல் முடிவுகளில் திமுக வேட்பாளர் கோபாலை காட்டிலும் 2093 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். கடந்த 2011 - 16 என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் அரசு கொறடாவாக இயங்கியவர் நேரு. 

முத்தியால்பேட்டை தொகுதி - பிரகாஷ்குமார் 

புதுச்சேரியில் அமைந்துள்ள மற்றொரு தொகுதி தான் முத்தியால்பேட்டை. இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரகாஷ்குமார் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாகும் வரை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமியுடன் சுற்றி வந்தார். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் முத்தியால்பேட்டை தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதனால் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. 

934 வாக்கு வித்தியாசத்தில் 2016 தேர்தலில் எம்.எல்.ஏவாக தேர்வாகி மக்கள் பணியாற்றி வந்த அதிமுக வேட்பாளர் வையாபுரி மணிகண்டனை வீழ்த்தி வென்றுள்ளார் பிரகாஷ்குமார். 

உழவர்கரை தொகுதி - சிவசங்கர் 

புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள உழவர்கரை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார் சிவசங்கர். இவர் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பின் தலைவர் ஆவார். அதோடு பாஜகவிலும் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வந்தார். தொகுதி உடன்பாட்டில் உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் சார்பாக முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அவரை 819 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் சிவசங்கர். தேர்தலில் அவர் தனித்து களம் இறங்கியதால் பாஜகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். 

திருபுவனை தொகுதி - அங்காளன்

புதுச்சேரி ஊரக பகுதியில் அமைந்துள்ளது திருபுவனை தொகுதி. இந்த தொகுதி தனி தொகுதியாகும். 2001 மற்றும் 2006இல் காங்கிரஸ் சார்பிலும், 2016 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியவர் அங்காளன். கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கினார். மொத்தம் 2359 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கோபிகாவை வீழ்த்தி எம்.எல். ஏ ஆகியுள்ளார் அங்காளன். இரண்டாம் இடம் பிடித்த கோபிகா கடந்த 2016 தேர்தலில் 1432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

திருநள்ளார் தொகுதி - பி.ஆர்.சிவா 

2006 மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பணியாற்றியவர் பி.ஆர்.சிவா. 2016 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் திருநள்ளார் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதனால் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டார். அவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. 

இந்த நிலையில் 1380 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் கமலக்கண்ணனை வீழ்த்தி எம்.எல்.ஏவாக தேர்வாகி உள்ளார். 

ஏனாம் - கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக் 

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியவர் 28 வயதான இளைஞர் கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக். முதுநிலை டிப்ளோமா முடித்துள்ளார். இவர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்காசமியை எதிர்த்து போட்டியிட்டார். ரங்கசாமியை காட்டிலும் 646 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். ரங்கசாமி 16228 வாக்குகளை பெற்றார். மறுபக்கம் கொல்லப்பல்லி ஸ்ரீநிவாஸ் அசோக் 16874 பெற்றிருந்தார். 

வழக்கமாக சுயேட்சை வேட்பாளர்கள் புதுச்சேரி அரசியலில் ஆட்சி அமைக்க உதவுவார்கள். கடந்த 2011 தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்ற என். ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைக்க சுயேட்சை உறுப்பினர் VMC சிவக்குமார் ஆதரவு அளித்தார். அதே போல 2016 தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க சுயேட்சை உறுப்பினர் ராமச்சந்திரனின் ஆதரவு பெரிதும் உதவியது. 

ஆனால் இந்தமுறை அவர்களது ஆதரவு ஏதும் இல்லாமல் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் யார்? என்பதில் சில முரண்பாடு இருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் ரங்கசாமி தான் முதல்வர் என பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரி எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அவர் சந்திததுள்ளார். 

அதே நேரத்தில் சில சுயேட்சை வேட்பாளர்கள் வலிய சென்று ரங்கசாமிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

-எல்லுச்சாமி கார்த்திக் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com