புதுச்சேரியில் இன்று முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாநிலங்களும் இ-பாஸ் முறையை பின்பற்றி வந்தன. கடந்த 4 மாதங்களாக பின்பற்றப்பட்டு வந்த இ-பாஸ் முறையை கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு ரத்து செய்தது. இருப்பினும் சில மாநிலங்கள் தொடர்ந்து இ-பாஸ் முறையை பின்பற்றி வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லையா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் இனி இ-பாஸ் முறையை மாநிலங்கள் பின்பற்றக்கூடாது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் இ-பாஸ் முறையை ரத்து செய்வதாக அம்மாநில அரசு இ-பாஸ் பெறும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியிருக்கிறது. இதன் மூலம் இன்று முதல் புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லவும், பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரி வருவதற்கும் இனி இ-பாஸ் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.