சீருடை - ஐ.டி கார்ட் அணிந்து புத்தகப்பையுடன் சட்டப்பேரவைக்கு சென்ற புதுச்சேரி திமுகவினர்!

சீருடை - ஐ.டி கார்ட் அணிந்து புத்தகப்பையுடன் சட்டப்பேரவைக்கு சென்ற புதுச்சேரி திமுகவினர்!
சீருடை - ஐ.டி கார்ட் அணிந்து புத்தகப்பையுடன் சட்டப்பேரவைக்கு சென்ற புதுச்சேரி திமுகவினர்!

புதுச்சேரியில் வெறும் 24 நிமிடங்கள் மட்டுமே நடந்துள்ளது சட்டப்பேரவை கூட்டம். இதில், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்க வலியுறுத்தி பள்ளி சீருடையுடன் நூதன முறையில் பங்கேற்றனர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே, காரசார வாக்குவாதத்துடன் அங்கிருந்து வெளிநடப்பும் செய்தனர் அவர்கள்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி தற்போது 6 மாத காலம் முடிவடைய உள்ளதால், புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். முதலாவதாக சபையில், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.

இதர்கிடையே, `மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் `மாநில அந்தஸ்து விவாகரத்தில் புதுச்சேரி அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பேரவையில் தெரிவிக்க வேண்டும்’ எனவும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார். இதனால் மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி பேரவையில் கண்டன முழக்கங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

ஆனால் இது குறித்து பேச பேரவையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டனர். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட அமளியில், பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே அரசின் கூடுதல் செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து பேரவையை கால வரையின்றி ஒத்தி வைத்து அறிவித்தார் சபாநாயகர் செல்வம். இதனால் பேரவை தொடங்கி 24 நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 8 மாதங்கள் ஆகியும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வரை சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக சீருடை, புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை உடனடியாக அரசு வழங்கிட வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பள்ளி சீருடை அணிந்து, அடையாள அட்டையுடன் புத்தக பையை மாட்டிக் கொண்டு சைக்கிளில் சட்டப்பேரவைக்குள் சென்றனர்.

தொடர்ந்து சீருடை மற்றும் பையை மாட்டிக் கொண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகம் வழங்க வலியுறுத்தி சீருடையுடன் சைக்கிளில் சட்டப்பேரவை வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் சிவா, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை, நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி திமுக எம்.பிக்கள் பதிவு செய்ய, கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்படும்” என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com