”அதிகாரமில்லாமல் தினமும் மன உளைச்சல்”.. கொட்டி தீர்த்த ரங்கசாமி! புதுவையில் நடப்பது என்ன?

”அதிகாரமில்லாமல் தினமும் மன உளைச்சல்”.. கொட்டி தீர்த்த ரங்கசாமி! புதுவையில் நடப்பது என்ன?
”அதிகாரமில்லாமல் தினமும் மன உளைச்சல்”.. கொட்டி தீர்த்த ரங்கசாமி! புதுவையில் நடப்பது என்ன?

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்ற சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் தினமும் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்வர் ரங்கசாமியின் பேசியுள்ளது புதுச்சேரி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் மன உளைச்சல் தான் - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்டு சமூக அமைப்பினரிடம் முதல்வர் பேசுகையில்,

”புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் ஆள்வதில் சிரமம் உள்ளது என ஆளுபவர்களுக்கு மட்டுமே தெரியும். யாருக்காகவது ஏதாவது செய்துகொடுக்க வேண்டும் என்றால் முடிவது இல்லை. தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது.

தலைமைச்செயலாளர், துறைச்செயலர்களை வைத்து பேசும்போது ஒவ்வொரு கருத்து வரும். அப்பொழுது எதுவும் செய்யமுடியவில்லை என்ற நிலையும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒன்றும் இல்லை என்பதை நிரூபணமாக்கிவிட்டது. அதிகாரம் வேண்டும் என்று ரங்கசாமி துடிக்கின்றார் என பலர் கேலி பேசுகிறார்கள். நான் யாருக்காக அதிகாரம் வேண்டும் என்று கேட்கின்றேன்?. இனி பின்னால் வருபவர்கள் என்னென்ன சிரமத்தை சந்திக்கப்போகிறார்கள் என்பதைத்தான் நான் வலியுறுத்துகின்றேன். ஆனால் இன்று நான் அனுபவிக்கின்றேன். ஏற்கனவே ஏதாவது செய்து கொடுத்தார்களா? கடந்த ஆட்சியில் இருந்து (நாராயணசாமி ஆட்சியில் இருந்து) நிலைமை மாறிவிட்டது.

மரியாதையே இல்லை என்ற நிலை!

கடந்த ஆட்சியில் (ஆளுநருக்கு அதிகாரமா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமா என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கில், ஆளுநருக்கு தான் அதிகாரம் என உத்தரவிட்டது) உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு, நமக்கு ஒன்றுமே இல்லை; மரியாதையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அதிகாரிகள் எனக்கு தெரியாமலேயே அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடுகின்றார்கள்” என்று வேதனை தெரிவித்தார்.

திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்

மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் கலந்து கொண்ட கூட்டத்தில் ரங்கசாமி பேசும்போது, ”திட்டங்களை நிறைவேற்றும்போது மத்திய அரசிடம் அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால், என்னால் மாநில வளர்ச்சிக்கு எதுவும் செய்ய முடியவில்லை” என பகிரங்கமாக பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இன்று முதல்வரின் பேச்சு புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

ரங்கசாமி எங்களை சொல்லவில்லை - பாஜக மாநில தலைவர்

இது குறித்து பாஜக மாநில தலைவர் சாமிநாதன் புதியதலைமுறைக்கு அளித்த தனித்த பேட்டியில், ”கடந்த 50 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதிகாரமிக்க பதவியில் நாராயணசாமி இருந்தார். ஆனால் அப்போது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வாங்க முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்று 18 மாதங்கள் தான் ஆகின்றது. முதல்வரின் பேச்சு இப்போது உள்ள மத்திய அரசு செய்யவில்லை என்று சொல்லவில்லை.

கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் செய்யவில்லை என்று தான் பேசுகின்றார். எங்களைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தை இங்கே பேசுவதைவிட பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்தித்து தான் முறையிட்டு தீர்வு காணவேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகளுக்கான அதிகாரம் பற்றி மாநிலங்களுக்கு தனி யூனியன் பிரதேசங்களுக்கு தனியாக உள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து தேவையா இல்லையா என்பதை நாங்கள் முடிவெடுக்க முடியாது மக்களுக்கு எது நல்லதோ அதையே நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.

ரங்கசாமி இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? - நாராயணசாமி

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மாநில அந்தஸ்த்து கோரி நாங்கள் டில்லி சென்று போராட்டம் நடத்தியபோது எங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை, கிரண்பேடிக்கு எதிராக போராடியபோது அவருக்கு ஆதரவாக செயல்பட்ட ரங்கசாமி இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?” என கேள்வியெழுப்பினார்.

மேலும், “மாநில அந்தஸ்த்து பெறுவதற்குத்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி தன்னால் செயல்படமுடியவில்லை என புலம்புகின்றார். ஆக ரங்கசாமிக்கு பாஜக ஒத்துழைக்கவில்லையா? மத்திய அரசுக்கு ரங்கசாமி என்ன அழுத்தம் கொடுத்தார். அனைத்து கட்சிகளை அழைத்து ஆலோசித்தாரா? இப்போது புலம்ப என்ன காரணம், ஆளுநரும் தானும் இணைந்து பணியாற்றுவதாக ரங்கசாமி கூறுகின்றார். எந்தவித கொள்கையும் இல்லாமல் முதல்வர் ரங்கசாமி உள்ளார்,

மத்திய அரசை எதிர்த்து மாநில அந்தஸ்த்து வேண்டும் என வலியுறுத்தி தெருவில் இறங்கி போராடுவாரா?. ஆதங்கத்தை பேசி என்ன பயன். ஆகவே முதலமைச்சராக இருக்க ரங்கசாமி தகுதியற்றவர்” என சாடினார்.

போராட்டக்களத்தில் குதித்தால் ரங்கசாமிக்கு துணை நிற்போம் - புதுச்சேரி திமுக

இது குறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான சிவா புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், “புதுச்சேரியை சிங்கப்பூராக ஆக்குவேன், மாநில அந்தஸ்து பெற்றுத்தருவேன், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் திட்டங்கள் நிறைவேறும் என கூறி  ஆட்சிக்கு வந்த ரங்கசாமியால் இன்று நிர்வாகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது. இதை திமுக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் குரல்கொடுப்பார்கள். இந்த விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி தனது உண்மை முகத்தை காட்டி போராட்டக்களத்தில் குதித்தால் நாங்கள் (திமுக) ஆதரவளிப்போம்” என தெரிவித்துள்ளார்.

வேறு முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் - புதுச்சேரி அதிமுக

இதனிடையே இந்த விவகாராம் குறித்து புதியதலைமுறைக்கு கருத்து தெரிவித்த மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், “18 ஆண்டுகள் முதல்வராக செயல்பட்ட ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு எப்படி அணுக வேண்டும் என தெரியவில்லை. தன்னால் ஆட்சி செய்ய முடியவில்லை எனில் பதவி விலகிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் வேறு முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

என்ன செய்யப்போகிறார் ரங்கசாமி?

கூட்டணியில் ரங்கசாமிக்கு எதிரான நிலைப்பாடு வலுக்கின்றதா, அல்லது முதல்வர் ரங்கசாமி தனது கொள்கையில் உறுதியுடன் இருப்பாரா? இந்த விவகாரம் கூட்டணியை பாதிக்குமா என்பது குறித்து போகப்போகத்தான் தெரியும். மேலும், இந்த விவகாரத்தில் புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்த்து என்ற கோரிக்கையை வலியுறுத்தும் அனைத்து சமூக அமைப்புகளும் ஒரு சில சுயேட்சை எம்.எல்.ஏக்களும் முதல்வருக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். இது ரங்கசாமிக்கு பலம் சேருமா? பலவீனமாகுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

மேலும், ரங்கசாமி ஒருகட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இந்த விவகாரத்திற்காக வெளியில் வந்தால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் ஆதரவு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

எப்படியாக இருந்தாலும் அதிகாரம் என்று வலுக்கும் குரல் மக்களுக்கு பயனுள்ளதாக அமையவேண்டும் அரசியல் காரணங்களுக்கக எழுப்பப்பட்டால் அது மக்களின் நலன் பாதிக்கும் என்பது புதுச்சேரி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 ரஹ்மான் (புதுச்சேரி)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com