முடிவுக்கு வருமா தர்ணா? - ஆளுநரை மாலை சந்திக்கிறார் நாராயணசாமி
ஆளுநர் அனுப்பிய கடிதம் கிடைத்தது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து கடந்த 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அதேசமயம் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கிய மறுநாள் அதாவது 14-ஆம் தேதி துணை ஆளுநரான கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார் நாராயணசாமி. அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நாராயணசாமி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நாராயணசாமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாராசாமி போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனிடையே ஆளுநர் கிரண்பேடி மத்திய பாதுகாப்பு படை உதவியுடன் சற்று நேரத்திற்கு முன்பு டெல்லியில் இருந்து புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வந்தார். முன்னதாக ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியிருந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் புதியதலைமுறை செய்தியாளருக்கு பேட்டியளித்த முதலமைச்சர் நாராயணசாமி, “ஆளுநர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. மாலை 6 மணிக்கு அமைச்சர்களுடன் ஆளுநரை சந்திக்கிறேன். பேச்சுவார்த்தையில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருக்க வேண்டும். புதுச்சேரி மாநில மக்களின் பிரச்னைகள் குறித்து ஆளுநரிடம் முன்வைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.