புதுச்சேரியில் சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்!
விறகு அடுப்பு, கேஸ் அடுப்பு என எல்லாவற்றிலும் சமைத்து பழக்கப்பட்டுப் போன பெண்கள். சில வருடங்களாக மின்சார அடுப்பு எனப்படும் இண்டக்சன் (Induction) அடுப்பிலும் சமைக்க பழகிக்கொண்டனர். நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான சூரிய மின்சக்தியை பயன்படுத்த தொடங்கி விட்டனர், மக்கள்.
விதவிதமான பாத்திரங்களில் சமையல் செய்துப் பார்த்திருக்கிறோம். இதென்ன புதுவிதமான பாத்திரம் என்று ஆச்சரியப்படுத்தும் விதத்தில் புதுச்சேரியில் வசிக்கும் குடும்பம் ஒன்று சோலார் விங்க்ஸ் வடிவிலான சோலார் குக்கரில் கடந்த ஒரு வருடமாக உணவு சமைக்கிறார்கள் என்றால் ஆச்சரியத்திற்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த குக்கரில் சாதம், பருப்பு போன்ற அனைத்துமே 1.5 மணி நேரத்திலேயே சமைத்துவிடலாம் என்று கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இக்குடும்பத்திற்கான மொத்த மின் தேவையையும் சோலார் பேனல்கள் மூலமாகவே பெற்றுக்கொள்கின்றனர். அதனால் மின்கட்டணமும் குறைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் இவர்கள் பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள மின்சாரத்தினை மீண்டும் கிரிட்(Grid) எனப்படும் மின்சார விநியோக அமைப்பிற்கு செலுத்தியும் வருகின்றனர்.
சூரிய மின்சக்தியினை பயன்படுத்தி சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் மின்விளக்குகள் போன்றவைகள் செயல்பாட்டிற்கு வரத்தொடங்கி மக்களும் சில ஆண்டுகளாக பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர். தற்போது இந்த சோலார் குக்கர் அனைவரது கவனத்தையும் கூடிய விரைவில் எட்ட வாய்ப்புள்ளது, அப்படி அனைவரது கவனத்தையும் எட்டினால் மின் தேவையின் அவசியம் சற்று குறையவாய்ப்புள்ளது.