புதுமைப்பெண் திட்ட துவக்க விழா: கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு விடுத்தார் அன்பில் மகேஷ்!

புதுமைப்பெண் திட்ட துவக்க விழா: கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு விடுத்தார் அன்பில் மகேஷ்!
புதுமைப்பெண் திட்ட துவக்க விழா: கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு விடுத்தார் அன்பில் மகேஷ்!

புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு விடுத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கும் "புதுமைப்பெண்" திட்ட தொடக்க விழா மற்றும் 26 "தகைசால் பள்ளிகள்" மற்றும் 15 "மாதிரிப் பள்ளிகள்" தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

விழாவில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவுக்கான அழைப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அரசுப் பள்ளிகளில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றன. இத்திட்டத்தின் கீழ் 93 ஆயிரம் மாணவிகள் நடப்பு கல்வி ஆண்டில் பலன் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

திட்டத்தின் தொடக்க விழா, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வட சென்னையில் உள்ள பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாகவும், அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்வதுடன் , டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களில், மிக முக்கியமான திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இதனால், திட்டம் தேசிய அளவில் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com