காவல்நிலையத்தில் புகுந்து தாக்குதல் : 5 காவலர்கள் படுகாயம்
நெல்லூரில் காவல்நிலையத்துக்குள் புகுந்து காவல்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் ராப்பூரைச் சேர்ந்த பிச்சையா, லட்சுமம்மா மற்றும் கனகம்மா ஆகியோர் ஜோசப் என்பவரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ராப்பூர் காவல்நிலையத்தில் ஜோசப் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் பிச்சையா உள்ளிட்ட 3 பேரையும் விசாரணைக்கு அழைத்த உதவி ஆய்வாளர் லட்சுமன்ராவ் அவர்களை சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதுடன், அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிச்சையா குடும்பத்தினர், ஊர்மக்கள் 100 பேருடன் இணைந்து காவல்நிலையத்திற்குள் புகுந்து உதவி ஆய்வாளர் லட்சுமன்ராவ் உள்ளிட்ட காவல்துறையினரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் லட்சுமன்ராவ் உள்ளிட்ட 5 காவலர்கள் பலத்த காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி கலவரம் ஏற்பட்டதுபோல பதட்டத்துடன் காணப்பட்டது.