பப்ஜி விளையாடும் போது தீர்ந்துபோன சார்ஜ்: கோபத்தில் கத்தியால் குத்திய இளைஞர்
பப்ஜி விளையாடும்போது செல்போனின் சார்ஜ் தீர்ந்த கோபத்தில் சகோதரிக்கு நிச்சயிக்கப்பட்ட நபரை கத்தியால் குத்திய இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
விளையாட்டு பிரியர்களை கவனத்தில் கொண்டு தினம் தினம் புதிது புதிதான, செல்போன் விளையாட்டுகள் களம் இறக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன் பல்வேறு மொபைல் விளையாட்டுகள் அனைவரையும் கட்டிப்போட்டு, விடைபெற்றன. இப்போதைய டிரெண்ட் பப்ஜி. இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி வருகின்றனர்.
பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி பப்ஜி விளையாட்டு அனைவரையும் மனதளவில் அடிமையாக்கி விடுகிறது என்று கூறப்படுகிறது. இதனால் சில மாநிலங்கள் இந்த விளையாட்டை தடை செய்யவும் முயற்சி எடுத்து வருகின்றன. குஜராத் மாநில பள்ளிகளில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டின் வீரியத்தால் பல வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினிஷ் ராஜ்பார். இவர் தனது செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது செல்போனின் சார்ஜ் முற்றிலும் தீர்ந்துள்ளது. இதனையடுத்து விளையாட்டை தொடர, சார்ஜரை அவசரமாக தேடியுள்ளார் ரஜினிஷ். ஆனால் அவரது சார்ஜரின் வயர் அறுந்துகிடந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது சார்ஜர் வயரை அறுத்தது தன் சகோதரி தான் என சந்தேகம் அடைந்துள்ளார். அதே நேரம் ரஜினிஷின் சகோதரி தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டவரான ஓம் பாவ்ட்கருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
சகோதரியிடம் கோபமாக சென்ற ரஜினிஷ், சார்ஜர் வயரை அறுத்ததாகக்கூறி அவரிடம் சண்டையிட்டுள்ளார். சண்டையை அருகில் இருந்த ஓம் தடுக்கவே அது கைகலப்பாக மாறியுள்ளது. சண்டை முற்றவே ஆத்திரத்தில் அருகில் இருந்த கத்தியால் ஓமின் வயிற்றில் குத்தியுள்ளார் ரஜினிஷ். கத்திக்குத்தில் காயமடைந்த ஓம் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு விளையாட்டின் வீரியம், தான் என்ன செய்கிறேன் என்றுகூட தெரியாத அளவுக்கு ஒருவரை மனதளவில் மாற்றிவிடுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.