மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது கொடூர தாக்குதல்! (வீடியோ)
மேற்குவங்கத்தில் குழந்தைகளை கடத்த முயன்றதாக கூறி கிராம பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கிராம மக்கள் கொடூரமாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் மிதிப்பூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். குழந்தைகளை பார்த்தவுடன் அவர்களிடம் ஆசையாக பேசவும் அவர் முயன்றுள்ளார். இவரின் தோற்றத்தை பார்த்த குழந்தைகள் அவரை பார்த்தவுடன் ஓட்டம் பிடித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் இவர் குழந்தைகளை கடத்த முயல்வதாக தவறாக எண்ணிக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து அந்த பெண்மணியை பிடித்து டிராக்டரில் கட்டி வைத்த கிராமத்தினர், தொடர்ந்து பல மணி நேரம் அவரை கற்களாலும், கட்டைகளாலும் கொடூரமாக தாக்கினர். தான் நிரபராதி என்பதை கூறத்தெரியாத அந்த பெண் செய்வதறியாமலும், வலியாலும் துடித்தார். இதனை அங்கிருந்த மனித மிருகங்களும் சிலர் தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்தும் ரசித்தனர். படுகாயமடைந்த அவரை மீட்ட போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் ஒட்டிரா பீபி என்றும், உணவுக்காக அவர் அந்த ஊரில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.