பிஎஸ்எல்வி சி-62 ராக்கெட் திட்டம் | 2026 தொடக்கத்திலேயே முதல் தோல்வி.. காரணம் என்ன?
பிஎஸ்எல்விசி சி62 ராக்கெட் மூலம் 16 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் தோல்வியடைந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மூலம், மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனுடன் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. இந்த நிலையில், பிஎஸ்எல்விசி சி62 ராக்கெட் மூலம் 16 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் தோல்வியடைந்தது. காலை 10.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்ட ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்த சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதாவது, 17 நிமிட பயணத்திற்குப் பிறகு இந்தச் செயற்கைக்கோள்களை சுமார் 511 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது.
4-வது நிலையில் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஆனால் 3-வது நிலையின்போது கோளாறு ஏற்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையை விட்டு விலகியது. முதல் 2 கட்டங்களும் திட்டமிட்டபடி செயல்பட்ட நிலையில் 3-ஆவது கட்டத்தில் ஏற்பட்ட கோளாறால் ராக்கெட்டுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் ராக்கெட்டின் பாதை மாறியதாகவும் இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர், “3-வது நிலையின் இறுதிவரை ராக்கெட்டின் செயல்பாடு எதிர்பார்த்தபடியே இருந்தது. ஆனால், 3-வது நிலை முடிவடையும் தருணத்தின்போது இலக்கை அடைய முடியவில்லை. நாங்கள் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து வருகிறோம். விரைவில் இது குறித்து விவாதிப்போம்” என்றார். கடந்த 8 மாதங்களில் இஸ்ரோ 2ஆவது தோல்வியை சந்தித்திருப்பது அதன் வணிக ரீதியான செயல்பாடுகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

