7 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்த 'PSLV-C56'ன் சிறப்பம்சங்கள் என்ன?

'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட், சிங்கப்பூரை சேர்ந்த பிரதான செயற்கை கோள் உட்பட 7 செயற்கை கோள்களை வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தியது.

நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தனியார் மற்றும் பிற நாடுகளுக்கு இடையே செயற்கைக் கோள்களை அனுப்ப வணிக நோக்கத்தோடு இஸ்ரோவால் தொடங்கப்பட்டதாகும். சிங்கப்பூர் அரசு - நியூ ஸ்பேஸ் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி 'டிஎஸ்- சாட்' செயற்கைக் கோள், விண்ணில் அனுப்பப்பட கையெழுத்தானது. ராக்கெட்டை நிலை நிறுத்தி செயற்கைக்கோளை பொருத்தும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற நிலையில், நேற்று காலை 25:30 மணி நேரத்திற்கான கவுண்டவுன் தொடங்கியது.

rocket launch
rocket launchpt desk

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று காலை 6.30 மணிக்கு, முதல் ஏவுதளத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி. சி-56' ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 24 நிமிடங்கள் திட்டமிட்டபடி பயணித்த பிஎஸ்எல்வி ராக்கெட், செயற்கைக்கோளை பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.

சிங்கப்பூரை சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட 'டிஎஸ் - சாட்' என்ற பிரதான செயற்கைக்கோள் 530 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்திய பின்னர் அடுத்தடுத்த ஆறு சிறிய செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பப்பட்டன.

அந்த ஆறு சிறிய செயற்கைக்கோள்கள்:

* 23 கிலோ எடை கொண்ட 'விகிலேக்ஸ்- ஏஎம்' என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள்

* 'ஆர்கேட்' என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள்

* 'எக்ஸ்ப்ளோரர்' என்ற ஒரு சோதனை செயற்கைக்கோள்

* 'ஸ்கூப்-2' என்ற 3ஏ நானோ செயற்கைக்கோள்

* கலாசியா-2 என்ற மற்றொரு 3ஏ நானோ செயற்கைக்கோள்

* ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் ஆகிய 6 செயற்கைக்கோள்கள்

ஆகியவை.

இந்த 'டிஎஸ்- சாட்' செயற்கைக்கோள் 'இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்' செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. எனவே அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும். பி.எஸ்.எல்.வி சி 56 திட்டத்தின் சுற்றுப் பாதை இறக்குதல் எனும் சோதனை நடத்தப்பட்டது. 535 கிலோமீட்டர் உயரத்தில் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தும் தொழில்நுட்பம் இயங்கினாலும் 300 கிலோ மீட்டரில் அது இயங்குமா என சோதனை நடத்தப்பட்டது. அதுவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் சிங்கப்பூர் நாட்டிற்கு மட்டும் இரண்டு முறை செயற்கைக் கோள்களை விண்ணில் நிலை நிறுத்த இஸ்ரோ ராக்கெட் உதவி செய்துள்ளது. சந்திரயான் விண்கலம் திட்டமிட்டபடி கடந்த 15 நாட்களாக பயணித்து வரும் நிலையில், மற்றொரு ராக்கெட் பயணத்தை இஸ்ரோ வெற்றிகரமாக முடித்துள்ளது இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com