ஆசிஃபா வழக்கில் கைதான இளைஞரின் முந்தைய குற்றங்களும் அம்பலமானது..!
சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள ஒருவர், தேர்வில் தனக்கு பதில் இன்னொருவரை வைத்து தேர்வு எழுதி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ஆசிஃபா என்ற 8 வயதுச் சிறுமி கடந்த ஜனவரி 10ஆம் தேதி காணாமல் போனார். ஒரு வாரத்திற்குப் பிறகு ராஸன்னா வனப்பகுதியில் இருந்து சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சிறுமியை ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து வழிபாட்டுத்தலம் ஒன்றில், மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி தடயவியல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 18 வயது நிரம்பாத அந்தச் சிறுவன், சிறுமியை அடித்துக்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இந்திய அளவில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஆசிஃபாக்கு நீதி வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விஷால் ஜன்கோத்ரா என்பவரும் ஒருவர். இவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவத்தன்று தான் உத்தரப்பிரதேசத்தில் பிஎஸ்சி தேர்வு எழுதிக் கொண்டிருந்ததாகக் கூறினார். இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், போலீசார் கேட்டுக்கொண்டதன் பேரில் இது சம்பந்தமான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார். அதில் விஷால் ஜன்கோத்ராவும் அவரின் மற்ற 3 நண்பர்களும் கடந்த ஜனவரி மாதம் தேர்வு எழுதாதது தெரியவந்திருக்கிறது. மேலும் விஷால் மற்றும் அவரின் 3 நண்பர்கள் சார்பில் தேர்வு எழுதியதாக கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்துள்ளது. இதுதவிர 4 பேரும் தங்களது முகவரியை மாற்றிக்கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
தேர்வு சமயத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. ஆனால் விடைத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே வேறு ஒரு நபரை வைத்து தேர்வு எழுதி விஷால் ஜன்கோத்ரா மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்தச் சம்பவம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.