“தந்தையை நினைத்து பெருமை கொள்கிறேன்” - வீரமரணமடைந்தவரின் மகள்
என்னுடைய அப்பாவின் இறப்பு எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது என வீரமரணம் அடைந்த வீரர் பிரசன்னா குமார் சாஹுவின் மகள் ரோஷி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்று 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பயணம் செய்துகொண்டிருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, நேற்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியது. இதில் 44 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த இருவரும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்திய மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த தாக்குதலில் ஒடிசாவை சேர்ந்த பிரசன்னா குமார் சாஹு என்பவரும் மனோஜ் பெஹேரா என்பவரும் வீர மரணம் அடைந்தனர்.
பிரசன்னா குமார் சாஹூ ஒடிசா ஜகத்சிங்பூர் மாவட்டம் பரிஸ்கிஹரா கிராமத்தை சேர்ந்தவர். இவர் 1995 ஆம் ஆண்டு சிஆர்.பிஎஃப் படையில் சேர்ந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ரோஷி என்ற 18 வயது மகளும், ஜகன் என்ற 16 வயது மகனும் உள்ளனர்.
இவருடைய குழந்தைகள் இருவரும் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், வீரரின் மகள் ரோஷி, “ என்னுடைய அப்பாவின் இறப்பு எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது. ஆனாலும் நாட்டுக்காக அவர் உயிர் தியாகம் செய்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்.” என கண்ணீருடன் தெரிவித்தார்.
மற்றொரு வீரரான மனோஜ் பெஹேரா கட்டாக் மாவட்டத்தை சேர்ந்தவர். வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.