'அக்னிபாத்' திட்டம் - வட மாநிலங்களில் தீவிரமடைகிறது போாரட்டம்; 12 ரயில்கள் எரிப்பு

'அக்னிபாத்' திட்டம் - வட மாநிலங்களில் தீவிரமடைகிறது போாரட்டம்; 12 ரயில்கள் எரிப்பு
'அக்னிபாத்' திட்டம் - வட மாநிலங்களில் தீவிரமடைகிறது போாரட்டம்; 12 ரயில்கள் எரிப்பு

மத்திய அரசின் 'அக்னிபாத்' திட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெடித்துள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பல மாநிலங்களில் ரயில்களும், ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன.

ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையில் மத்திய அரசு 'அக்னிபாத்' திட்டத்தை கடந்த 14-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றுவர். அதன் பின்னர், அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டும் ராணுவத்தில் நிலைத்திருப்பார்கள். மீதமுள்ள 75 சதவீதத்தினர் வெளியேறி விடுவார்கள். இந்த அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது.

இந்நிலையில், பணி நிரந்தரமும், எந்தவித ஓய்வூதியப் பலன்களும் இல்லாமல் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, உத்தரபிரதேசம், பிகார், ஹரியாணா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென் மாநிலங்களை பொறுத்தவரை, தெலங்கானாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நேற்று முதல் வன்முறையாக மாறி வருகின்றன.

உத்தரபிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு தீ வைத்தனர். பிகாரில் கலவரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், அம்மாநில துணை முதல்வர் ரேணு தேவியின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஈடுபட்டது. பின்னர் போலீஸார் வந்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். துணை முதல்வர் ரேணு தேவி வீட்டில் இல்லாததால், பெரும் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். வன்முறையின் ஒருபகுதியாக, சித்வாலா ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. . பிகாரில் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அங்கு 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்முறையில் குதித்துள்ளனர். அம்மாநிலத்தில் உள்ள பாலியா ரயில் நிலையத்துக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு போராட்டக்கார்கள் நேற்று தீ வைத்தனர். இதே போல, பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனால் உத்தரபிரதேசத்தில் ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், ஆட்டோக்களுக்கும் தீ வைக்கப்பட்டு வருகின்றன. பல அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன.

இதேபோல, ஹரியாணா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் போராட்டங்களும், வன்முறைகளும் ஒருசேர நடைபெற்று வருகின்றன. தெலங்கானாவில் வாராங்கலில் ரயில் ஒன்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் பயணி ஒருவர் உயிரிழந்ததார். 15 பேர் காயமடைந்தனர். பல இடங்களில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது.

இவ்வாறு நாடு முழுவதும் நடைபெறும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் 12 ரயில்கள் தீக்கிரையாகியுள்ளன. 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ரயில்கள் வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. 90-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதி வழியிலேயே நின்றுக் கொண்டிருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com