ராணுவ வாகனத்தில் கட்டிவைக்கப்பட்ட இளைஞர்: கல்வீச்சைத் தடுக்க ராணுவம் தந்திரமா?
ஜம்மு காஷ்மீரில், ராணுவ வாகனத்தின் முன்பகுதியில் இளைஞர் ஒருவரைக் கட்டிவைத்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. தமது ட்விட்டர் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ள காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த வீடியோவில், வாகனத்தின் முன்பகுதியில் இளைஞரைக் கட்டிவைத்து வாகனத்தை ராணுவத்தினர் ஓட்டிச் செல்லும் காட்சி உள்ளது. மேலும், ராணுவத்தினர் மீது கல்லெறிந்து தாக்குவோருக்கு இனி இதுதான் தண்டனை என எச்சரிக்கும் ஆடியோவும் அதில் பதிவாகி உள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக உமர் அப்துல்லா தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கொலெனல் ராஜேஷ் கலியா, வீடியோவின் உண்மையானதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.