சச்சின் வீடு முன்பு ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் இறங்கிய எம்எல்ஏ... என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்போவதாக மகாராஷ்டிரா சுயேட்சை எம்.எல்.ஏ பட்சு காடு தெரிவித்துள்ளார்.
பட்சு காடு, சச்சின்
பட்சு காடு, சச்சின்ட்விட்டர்

நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தில் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துவருவதுடன், அதில் சிலர் மனவேதனையில் தற்கொலையும் செய்துகொள்கின்றனர். எனவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த ஆன்லைன் விளையாட்டால் ஏராளமானோர் தற்கொலை செய்துள்ளனர். இந்த விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மிfile image

அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை. அதேநேரத்தில் இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுஒருபுறமிருக்க, மறுபுறம் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் அதிக அளவில் நடித்து, சம்பாதித்து வருகின்றனர். அதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் ஒன்றில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் நடித்துள்ளார். இதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே மகாராஷ்டிர மாநில சுயேச்சை எம்.எல்.ஏவான பட்சு காடு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர், ”சச்சின் டெண்டுல்கர் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்திலிருந்து 15 நாள்களுக்குள் விலக வேண்டும். அப்படி விலகவில்லையெனில், அவரது வீட்டுக்கு வெளியில் போராட்டம் நடத்துவோம். ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து மக்களை விடுவிக்க சச்சின் டெண்டுல்கருக்கு இளநீரைக் கொடுப்போம். சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். எனவே அவர் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிப்பதால், பெரிய அளவில் மக்களிடம் தாக்கம் ஏற்படும்.

குழந்தைகள் அதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால், பெற்றோர் மிகவும் கோபத்தில் இருக்கின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் கடிதம் எழுதினேன். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் அழிந்திருக்கின்றன. எனவே, இதுதொடர்பான விளம்பரத்தில் நடிக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு அரசு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் வீடு முன்பு பட்சு காடுவும் அவரது ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்file image

இதுகுறித்து பட்சு காடு, “ஆன்லைன் விளம்பரத்தில் இருந்து விலகுமாறு சச்சினுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். இதற்கு அவர், பதில் அளிப்பதற்கு அவகாசமும் தந்திந்தோம். இந்த விவகாரத்தில் சச்சினிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் தற்போது சட்டப்பட்டி நோட்டீஸ் அனுப்ப முடிவெடுக்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com