நேற்று அயோத்தி.. இன்று பத்ரிநாத் கோயில்.. தொடரும் நிதி முறைகேடுகள்!
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. பைரவ் சேனா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, BKTC தலைவர் ஹேமந்த் திவேதி விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 1939 சட்டம் மற்றும் ஊழியர் நடத்தை விதிகளின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தொகையில் கோடிக்கணக்கான ரூபாய் காணாமல் போயுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு விவகாரத்தில் நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி (BKTC) பத்ரிநாத் கோயில் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரிக்க கோயில் நிர்வாகக் குழு (BKTC) ஒரு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அதன் தலைவர் ஹேமந்த் திவேதி தெரிவித்துள்ளார்.
பத்ரிநாத் கோயிலில் நிதி முறைகேடுகள் நடைபெறுவதாக 'பைரவ் சேனா' என்ற அமைப்பு குற்றம்சாட்டியது. அத்துடன், கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் ஹேமந்த் திவேதியின் தனிப்பட்ட உதவியாளருக்கு இந்த நிதிமுறைகேட்டில் தொடர்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
குறிப்பிட்ட அந்த நபர், தனது தனிப்பட்ட செயலாளர் அல்ல என்றும், அவர் கோயில் நிர்வாகக் குழுவில் ஒரு சாதாரண அரசு ஊழியர் என்றும் திவேதி கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விளக்கம் கோரப்பட்டு வருவதாகவும் நியாயமான மற்றும் விரிவான விசாரணைக்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணையின்போது ஏதேனும் பாதகமான உண்மைகளோ அல்லது முறைகேடுகளோ தெரியவந்தால், 'ஸ்ரீ பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் குழுச் சட்டம், 1939' மற்றும் 'ஊழியர் நடத்தை விதிகள்' ஆகியவற்றின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது சட்டரீதியான மற்றும் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஹேமந்த் திவேதி குறிப்பிட்டார்.

