“அஜய் மிஸ்ரா பதவி விலகாமல் நீதிக்கு சாத்தியமில்லை”: பிரியங்கா காந்தி
லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை ராகுல் காந்தியும், பிரியங்காவும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 2 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற பிரியங்கா காந்தியை சீதாபூர் என்ற இடத்தின் அருகே காவல்துறையினர் கைது செய்து விருந்தினர் மாளிகையில் சிறை வைத்தனர். இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பிரியங்காவுக்கும் ராகுலுக்கும் உத்தரப்பிரதேச அரசு அனுமதியளித்தது.
இதையடுத்து ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்வதற்காக லக்னோ விமானநிலையத்திற்குச் சென்றனர். அங்கிருந்து லக்கிம்பூருக்கு தங்களது வாகனங்களில் புறப்பட திட்டமிருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தங்களது வாகனங்களில் வரும்படி வற்புறுத்தினர். இதனை ஏற்க மறுத்த ராகுலும் இதர தலைவர்களும் லக்னோ விமானநிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை லக்கிம்பூர் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.
இதனிடையே, சீதாபூரில் சிறைக்காவலில் இருந்த பிரியங்கா விடுவிக்கப்பட அவரை ராகுல் தனது காரில் அழைத்துக்கொண்டு லக்கிம்பூர் சென்றார். மற்ற தலைவர்கள் தங்களது கார்களில் லக்கிம்பூருக்கு சென்றடைந்தனர். முதலில், வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயி லவ்பிரீத் சிங்கின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ராகுல் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
பின்னர் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதை வீடியோ பதிவு செய்ததற்காக சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ராம் காஷ்யப் என்ற செய்தியாளரின் குடும்பத்தினரையும் ராகுல் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளித்தனர்.
கார் மோதியதால் உயிரிழந்த 2 விவசாயிகள், அதனைத்தொடர்ந்து வெடித்த வன்முறையில் உயிரிழந்த மேலும் 2 விவசாயிகள் ஆகியோரது குடும்பத்தினரை ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி “இந்த குடும்பங்களுக்கு நிதியுதவி தேவையில்லை. அவர்களுக்கு நீதி வேண்டும். அமைச்சர் அஜய் மிஸ்ரா அவரது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அது சாத்தியமில்லை. அவர் பதவியில் இருந்தால் பாரபட்சமற்ற விசாரணைக்கு சாத்தியமில்லை. எஃப்.ஐ.ஆர் இல்லாமல் எங்களை கைது செய்ய முடிந்தால், அவர்கள் ஏன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய முடியாது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.