"துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்" - பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேசத்தில் இருபிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை, நீண்டநேர போராட்டத்துக்கு பின் பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார்.
சோன்பத்ரா பகுதியில் சொத்து தகராறில் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொன்றதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற பிரியங்காவுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. 144 தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி சோன்பத்ரா எல்லையிலேயே, பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டு மிர்சாபூரில் தங்கவைக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகே தாம் மிர்சாபூரைவிட்டு வெளியேறுவதாக தெரிவித்த அவர் இரவு முழுவதும் அங்கேயே தங்கினார். சுமார் 24 மணி நேரத்துக்குப் பிறகு சோன்பத்ரா சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோன்பத்ரா சம்பவத்துக்கு பாரதிய ஜனதா அரசும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முழுபொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் “பாஜக அரசு மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு, அனைத்து தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. காப்பாற்றவே அரசு இருக்கிறது. இதை பாஜக அரசு செய்ய தவறிவிட்டது.” எனத் தெரிவித்தார்.