‘இந்திரா மீண்டும் வருகிறார்’ முதன்முறையாக தேர்தலில் போட்டி... பிரியங்கா கடந்து வந்த பாதை!

கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திpt web

வயநாடு இடைத்தேர்தல்: களத்திற்கு வந்த பிரியங்கா

கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி. 2019-ம் ஆண்டிலிருந்து நேரடி அரசியல் களத்துக்கு வந்துவிட்டாலும், அவர் போட்டியிடும் முதல் தேர்தல் இதுதான்.

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தின் ராய்பரேலி, மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார் ராகுல்காந்தி. தொடர்ந்து, இரண்டில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யவேண்டிய சூழலில் ராய்பரேலியை தக்கவைத்துக்கொண்டு, வயநாட்டை ராஜினாமா செய்துள்ளார். அங்கு பிரியங்கா காந்தி வேட்பாளராகியிருக்கிறார். இந்நேரத்தில், பிரியங்கா காந்தி கடந்து வந்த அரசியல் பாதை குறித்துப் பார்ப்போம்.

1972 ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் பிறந்தவர் பிரியங்கா காந்தி. பள்ளிப்படிப்பை டேராடூனில் உள்ள, வெல்ஹம் பெண்கள் பள்ளியில் பயின்றார். தொடர்ந்து, அவரது பாட்டி இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக, வீட்டிலிருந்தே தனது படிப்பைத் தொடர்ந்தார். தொடர்ந்து, ஜீசஸ் அண்ட் மேரி கல்லூரியில் இளங்கலை உளவியல் பட்டம் பெற்றார். இதன்பிறகு பௌத்தவியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார். 1997-ம் ஆண்டு ராபர்ட் வதேரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள்.

பிரியங்கா காந்தி
வடமாநிலங்கள் போல மாறுகின்றனவா தமிழ்நாட்டு ரயில் பயணங்கள்? மக்கள் வைக்கும் கோரிக்கைகள் என்னென்ன?

மக்கள் ஈர்த்த அளவிற்கு அரசியல் ஈர்க்கவில்லை!

அரசியல் என்று பார்த்தால், 1999-ம் ஆண்டே தன் தாய் சோனியாகாந்தி போட்டியிட்ட அமேதியில் அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனாலும், அவர் நேரடி அரசியலுக்குள் வரவில்லை. மக்கள் என்னை ஈர்த்த அளவுக்கு அரசியல் என்னை ஈர்க்கவில்லை என அப்போது விளக்கம் அளித்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் தன்னுடைய தாய் சோனியா காந்தி போட்டியிட்ட ராய்பரேலி, சகோதரர் ராகுல் காந்தி போட்டியிட்டு அமேதி என இரண்டு தொகுதியிலும் மக்களைச் சந்தித்ததோடு, பிரசார வேலைகளையும் கவனித்துக்கொண்டார்.

தொடர்ந்து, 2007-ம் ஆண்டு, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது, ராய்பரேலி மற்றும் அமேதி தொகுதிக்குட்பட்ட பத்து சட்டமன்றத் தொகுதிகளில் சீட்டுக் கொடுப்பது தொடர்பாக உட்கட்சிப் பூசல் வெடித்தது. அதை சரிசெய்து அந்த பத்து தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்தார் பிரியங்கா.

2019 ஜனவரி 19ம் தேதி அதிகாரபூர்வமாக அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் பிரியங்கா காந்தி. அவருக்கு கிழக்கு உத்தரப்பிரதேச பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில், நேரடியாக தன்னுடைய அம்மா மற்றும் அண்ணன் போட்டியிடும் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் பிரியங்கா. அப்போது மக்களிடையே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, 2020 செப்டம்பரில், ஒட்டுமொத்த உத்தரப்பிரதேசத்துக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

பிரியங்கா காந்தி
பாடப்புத்தகங்களில் இந்தியாவிற்கு பதில் பாரத்? NCERT இயக்குநர் கொடுத்த பதில் என்ன?

உபியில் வளர்ந்த பிரியங்காவின் செல்வாக்கு

2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக பிரியங்கா காந்தி உருவாக்கிய தேர்தல் அறிக்கை பேசுபொருளானது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அந்த தேர்தல் அறிக்கை அமைந்திருந்தது. தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வராவிட்டாலும், பிரியங்கா காந்திக்கு உ.பியில் மிகப்பெரிய செல்வாக்கை உண்டாக்கித் தந்தது.

அதேபோல ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்ததால், இமாச்சலப் பிரதேசத்திலும் பிரியங்கா காந்திதான் தீவிரமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதில் பிரியங்காவின் பங்கு முதன்மையாகப் பார்க்கப்பட்டது. தொடர்ந்து, ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையிலும் கலந்துகொண்டார் பிரியங்கா காந்தி. அதுமட்டுமில்லாமல், விவசாயிகள், பெண்கள் தொடர்பாக பல போராட்டங்களில் முன்னணியில் நின்றிருக்கிறார் பிரியங்கா காந்தி. பாஜகவுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்திFile image

2024 தேர்தலுக்கு முன்பாகவே சோனியாகாந்தி ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட, பாரம்பர்யமாக காங்கிரஸ் வெற்றிபெற்றுவரும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்ற செய்தி வெளியானது. ஆனால், ராய்பரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கே.எல்.ஷர்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பிரியங்கா காந்தி மிகப்பெரிய மக்கள் ஆதரவு இருக்கிறது.

அதனால், அவர் ஒரு தொகுதிக்குள் முடங்கிவிடாமல், அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்குச் செல்லவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என விளக்கம் தரப்பட்டது. பிரியங்காவும் பாஜகவுக்கு எதிராக மிகத் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ராகுல் போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் 3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.. தொடர்ந்து இன்று வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்ததோடு, பிரியங்கா அங்கே போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

பிரியங்கா காந்தி
”கை உள்ள போற அளவு கொம்பு குத்தி கிழிச்சிருந்தது” பெண்ணை மாடு தாக்கிய நிகழ்வு; பதறவைக்கும் காட்சி

இந்திரா மீண்டும் வருகிறார்

2019-ல் நேரடி அரசியலில் பிரியங்கா களமிறங்கியபோது, ‘இந்திரா மீண்டும் வருகிறார்’ என்று உற்சாகத்துடன் உத்தரப்பிரதேசம் முழுவதும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். ஆனால், தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்து வந்த அவர், தற்போது நேரடியாகக் களமிறங்கியிருக்கிறார்.

தொடர்ந்து அம்மாவுக்காகவும், அண்ணனுக்காகவும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்காகவும் பிரியங்கா ஓடினார். மிகத் தீவிரமாகப் பேசினார், உழைத்தார். தற்போது, அவர்கள் அனைவரும் வயநாட்டில் பிரியங்காவுக்காக பேசப்போகிறார்கள், உழைக்கப்போகிறார்கள்.

பிரியங்கா காந்தி
’கவாச்’ அமைப்பு இருந்தும் மேற்குவங்க ரயில் விபத்து நடந்தது எப்படி? - தோல்வி எங்கு? எழும் கேள்விகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com