டி.ஐ.ஜி.ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பெங்களூரு சிறையில் தாக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் சிரீயசாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகளை டிஐஜி. ரூபா அம்பலப்படுத்தினார். இதையடுத்து சிறையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கைதிகள் மோதிக்கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்த 32 கைதிகள், வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் 3 கைதிகளை பெலகாவி இண்டல்கா சிறைக்கு அழைத்து சென்றபோது, நடக்க முடியாத அளவுக்கு செல்லும் காட்சிகள் கன்னட சேனல்களில் வெளியானது. அந்தக் கைதிகளில் ஒருவர் அனந்தமூர்த்தி. ரூபாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அவரை அடித்து, அவரது மர்ம உறுப்பில் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் இண்டல்கா சிறையில் கடந்த 3 நாட்களாக வலிதாங்காமல் அவர் துடித்தாராம். சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் திடீரென்று மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பெலகாவியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் உடல்நிலை மோசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.