கேதார்நாத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கேதார்நாத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
கேதார்நாத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
உத்தரகாண்ட் கேதார்நாத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் 12 அடி உயர சிலையை திறந்துவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து கேதார்நாத் புறப்பட்டார். டேராடூன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில ஆளுநர் குர்மித் சிங் மற்றும் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கேதார்நாத் சிவன் கோவிலில் தீபாராதனை செய்து வழிபட்டார். தொடர்ந்து அவர் 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியாரின் உருவச் சிலையை திறந்து வைத்து, புதுப்பிக்கப்பட்ட சமாதி ஸ்தலத்தையும் திறந்து வைத்தார்.
பிரதமரின் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் பிரதமர் மோடி கேதார்நாத்தில் சரஸ்வதி தடுப்பு சுவர் ஆஸ்தபத் மற்றும் படித்துறைகள், மந்தாகினி தடுப்பு சுவர் ஆஸ்தபத், தீர்த்த புரோகிதர் வீடுகள் மற்றும் மந்தாகினி ஆற்றின் கருட் சட்டி பாலம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்தார். இப்பணிகள் ரூ.130 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அங்கு பேசிய பிரதமர் மோடி, ''சமுதாய நன்மைக்காக ஆதிசங்கரர் புதிய குறிக்கோளுடன் செயல்பட்டார். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறையினருக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். தீர்த்த யாத்திரை மூலம் நமது கலாச்சாரங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. யாத்திரையின் வாயிலாக கிடைப்பது மகிழ்ச்சி மட்டும் அல்ல பாரம்பரியமும் தான். கேதார்நாத் ஜோதி லிங்கத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும். இன்று அயோத்தியாவில் ராமருடைய கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. அயோத்தியாவுக்கு இந்த கவுரவம் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் ஆதி சங்கரரின் எண்ணங்கள் நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெளிநாடு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு தலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. புத்த கயா உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. அதே போல் இந்தியாவின் கலாச்சார பெருமையை உலகமே வியந்து பார்க்கிறது'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com