“அரசே அனைத்தையும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்” - மோடி வேதனை
எல்லாவற்றையும் அரசே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் செய்யாத பணிகள் பற்றி மக்கள் கேள்வி கேட்பதும் சமீபத்திய வழக்கமாகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி காந்தி நகரிலுள்ள அண்ணபூர்ணா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். இதைத்தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அரசு அனைத்துப் பணிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் எந்தப் பணிகள் முடிக்கப்படவில்லையோ அதற்கான பதிலையும் மக்கள் கேட்பதாகவும் மோடி தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற வழக்கம் இதற்கு முன்பு இருந்ததில்லை என்று கூறிய பிரதமர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களே விருந்தினர் மாளிகை, கோ சாலைகள், குளங்கள், நூலகங்களை அந்தக்காலத்தில் கட்டியதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த உதவிகள் தற்போது குறைந்து விட்டதால் அரசு நிர்வாகமே இவற்றைச் செய்ய வேண்டிய நிலை இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். நிர்வாகப் பொறுப்பை அரசும், அதற்கான அதிகாரத்தை சமூகமும் எடுத்துக் கொண்டால் அதிக அளவில் நலத்திட்ட உதவிகளை மக்களுக்குச் செய்ய முடியும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

