பிரதமர் மோடி தொடங்கி வைத்த மிக நீண்ட சுரங்கப்பாதை
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், கார்கில் மற்றும் லே ஆகிய பகுதிகளை இணைக்கும் ஜோஜிலா இருவழி சுரங்கபாதை அமைப்பதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்தச் சுரங்கப்பாதை ஆசியாவிலேயே மிக நீண்ட இருவழி சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறவுள்ளது.
காஷ்மீர் பகுதிக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, புத்தமத குரு குஷோக் பகுலா ரின்போச்-சின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அவர் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் ஜோஜிலா கனவாயை கடக்கும் நேரம் மூன்றரை மணி நேரத்திலிருந்து 15 நிமிடமாக குறையும். ஸ்ரீநகர்- கார்கில்- லே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 11,500 அடி உயரத்தில் ஜோஜிலா கனவாய் அமைந்துள்ளது.
குளிர் காலத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்படும் இப்பாதை, தற்போது 14.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தச் சுரங்கப்பாதை பணிகள் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீநகர், கார்கில், லே பகுதியில் 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கப்படுவதாக கூறினார். இது மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள முனைப்பை காட்டுவதாக குறிப்பிட்டார்.
மேலும் சுதந்திரம் பெற்ற பின்னர், மின்சாரம் இல்லாமல் இருந்த 18 ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் 4 கோடி வீடுகள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும், இவற்றிற்கு ஒன்றரை ஆண்டுக்குள் மின்சாரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.