கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, முதல்கட்டமாக 500 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக நேற்றிரவு கேரளா வந்தடைந்த பிரதமர் மோடி, இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி சென்றடைந்தார். தொடர்ந்து கொச்சியில் இருந்து கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். கேரள ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் உள்ளிட்டோரும் பிரதமருடன் ஹெலிகாப்டரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக கொச்சியில் பிரதமர் மோடி, கேரள ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் பிற அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்தும் மீட்பு பணிகள் குறித்தும் அவருக்கு விவரிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் 19 ஆயிரத்து 512 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அப்போது கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் முதல்கட்டமாக கேரளாவுக்கு பிரதமர் மோடி 500 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவுக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.