காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
கடந்த 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பிறந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74 வது பிறந்தநாள் இன்று. ஆனால், ”தொடர்ச்சியாக விவசாய மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருவதாலும் கொரோனா சூழலாலும் விவசாயிகளுக்கு ஆதரவாக சோனியா காந்தி இந்த ஆண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாட மாட்டார். மத்திய அரசிற்கு எதிரான இப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுடன் நிற்பார்கள். அதனால், கேக் வெட்டுதல் உட்பட எந்த பிறந்தநாள் கொண்டாட்டமும் வேண்டாம்” என்று நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான கே.சி வேணுகோபால் காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் அவரை ஆசிர்வதிப்பாராக” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.