பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின் போது ஐக்கிய நாடுகள் பொது அவை கூட்டத்தில் பேசும் பிரதமர், அமெரிக்கா அதிபர் உள்பட பல முக்கிய தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.
சிறப்பு விமானத்தின் மூலமாக வாஷிங்டன் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி , நாளை அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக்-ஐயும் அவர் சந்தித்து பேசுகிறார். பின்னர் ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் பிரதமர்களையும் தனித்தனியாக சந்தித்து பேசுகிறார். அன்றைய தினமே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்டு நல்லுறவு குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.
வரும் 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தான் விவகாரம், பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள், சீனாவின் நடவடிக்கைகள் என பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். இதனை அடுத்து அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட QUAD கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த சந்திப்புகளுக்கு பிறகு நியூயார்க் செல்லும் மோடி, 25ஆம் தேதி ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.