\
Prime Minister Modi
Prime Minister Modi Nehru Vs Modi

இந்தியாவின் நீண்ட நாள் பிரதமர்.. பிரதமர் மோடி படைக்கும் புதிய சாதனை.. ஆனாலும் முதலிடத்தில் நேருதான்!

இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களிலேயே நீண்ட நாள் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார்.
Published on
Summary

2014, 2019, 2024 ஆகிய மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக கூட்டணியை வெற்றிக்கு வழிநடத்திய நரேந்திர மோடி, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் நீண்ட காலம் பதவியில் இருப்பவர் என்ற புதிய சாதனையை படைக்க உள்ளார்.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 338 இடங்களில் வென்று மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டும் தனித்து 282 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்த நிலையில், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சியாக கூட வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக கூட்டணி முந்தைய தேர்தலை விட அதிக இடங்களில் அதாவது, 353 இடங்களில் வெற்றிபெற்றது. இந்த தேர்தலிலும் பாஜக தனித்து 303 இடங்களில் வென்ற நிலையில், பிரதமர் மோடி இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

பின்னர் கடந்த 2024 தேர்தலிலும் 293 இடங்களில் பாஜக கூட்டணி வென்ற நிலையில், மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், இந்தியாவின் வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி முதல்முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்ற நிலையில், நாளை பிரதமராக 4,399 நாட்களை மோடி நிறைவுசெய்யவுள்ளார். இதன் மூலம் மறைந்த பிரதமர் நேருவின் சாதனையை பிரதமர் மோடி முடியடிக்கவுள்ளார்.

மறைந்த பிரதமர் நேரு 1952 மே 13-ம் தேதி முதல் 1964 மே 27-ம் தேதி தான் காலமாகும்வரை பிரதமராக 4,398 நாட்கள் பிரதமராக இருந்தார். அதே நேரம் நேரு 1947 முதல் 1952 வரை அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் முன்னர் இடைக்கால இந்திய அரசாங்கத்தின் பிரதமராகவும் இருந்த நாட்களை கணக்கில் கொண்டால் மொத்தம் 6,130 நாட்கள் அவர் பிரதமராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையையும் பிரதமர் மோடி முறியடிக்கவேண்டும் என்றால் அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். அதே நேரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prime Minister Modi
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு.. அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com