பிரதமர் மோடி குடியுரிமைச் சான்றிதழை காட்டத் தேவையில்லை - ஆர்டிஐ தகவல்

பிரதமர் மோடி குடியுரிமைச் சான்றிதழை காட்டத் தேவையில்லை - ஆர்டிஐ தகவல்

பிரதமர் மோடி குடியுரிமைச் சான்றிதழை காட்டத் தேவையில்லை - ஆர்டிஐ தகவல்
Published on


பிரதமர் மோடி இந்திய குடிமகன் என்பதால் அவர் குடியுரிமைச் சான்றிதழ் எதையும் காட்டத் தேவையில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

நேற்று ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் பாரதிய ஜனதா சார்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்தியாவில்‌ இருக்கும் இஸ்லாமியர்கள் குடியுரிமையை இழப்பார்கள் என எதிர்க்கட்சிகள் தவறான தகவலை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

ஏற்கெனவே சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கையெழுத்து பிரதிகள் குடியரசுத் த‌லைவர் மாளிகைக்கு நேற்று முன்தினம் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் நாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, டெல்லியின் வடகிழக்கு பகுதி போர்க்களமாக மாறியது. இந்த வன்முறையில் 39 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இந்திய குடிமகன் என்பதால் அவர் குடியுரிமைச் சான்றிதழ் எதையும் காட்டத் தேவையில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. ஸ்ரீ சுபாங்கர் சர்கர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பிரதமர் மோடியின் குடியுரிமைச் சான்றிதழை காண்பிக்குமாறு கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள மத்திய அரசு, இந்தியக் குடியுரிமை சட்டம் 1955 இன் பிரிவு 3இன் படி பிறப்பால் பிரதமர் மோடி இந்தியாவின் குடிமகன் என்றும், பிறப்பால் இந்தியர் என்ற அந்தஸ்தை பெறுவதால், அவருக்கு குடியுரிமை சான்றிதழ் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com