சந்தேஷ்காலி விவகாரம்: மம்தாவைக் கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று கலந்துகொண்ட பிரதமர் மோடி, சந்தேஷ்காலி விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
ஷாஜகான் ஷேக், மம்தா, மோடி
ஷாஜகான் ஷேக், மம்தா, மோடிட்விட்டர்

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) சார்பில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தின் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான ஷாஜகான் ஷேக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் நிலத்தை வலுக்கட்டாயமாக அபகரிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையை அம்மாநில ஆளுநர் முதல் பாஜக வரை கையில் எடுக்க, ஆளும் மம்தா பானர்ஜிக்கு இது பெரும் தலைவலியைக் கொடுத்தது.

இந்த நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அவர், கடந்த 28ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகள் நீக்கம் செய்து அக்கட்சி உத்தரவிட்டுள்ளது. ஷாஜகான் மீதான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக்கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்ரீவஸ்தவா நேற்று மனுத் தாக்கல் செய்தார். அது, வரும் 4ஆம் தேதி விசாரனைக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சந்தேஷ்காலி குறித்து கவலை தெரிவித்ததுடன், இவ்விவகாரம் தொடர்பாக மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து அவர், “சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளுக்கு என்ன நடந்தது என்று இந்த நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் கொந்தளிப்பில் உள்ளது.

சந்தேஷ்காலியில் என்ன நடந்தது என்று சமூகச் சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய் அறிய நேர்ந்தால் அவரின் ஆன்மா கண்ணீர்விடும். திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி எல்லை மீறிவிட்டார். இங்குள்ள பெண்களின் மரியாதை, கண்ணியத்துக்காக மாநில பாஜக தலைவர்கள் போராடியுள்ளனர்” எனத் தெரிவித்த அவர், ’இந்த விவகாரத்தில் மம்தாவைப் போன்று I-N-D-I-A கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்களும் வாய்மூடி மவுனமாக இருந்தனர்’ என கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்க உள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநர் மாளிகைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com