உயரதிகாரியால் பாலியல் தொல்லை?.. ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் தர்ணா போராட்டம்..

உயரதிகாரியால் பாலியல் தொல்லை?.. ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் தர்ணா போராட்டம்..

உயரதிகாரியால் பாலியல் தொல்லை?.. ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் தர்ணா போராட்டம்..
Published on

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பெமிலா. இவர் கடந்த 3 ஆண்டுகளாக முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று மதியம் தன்னை உயர் அதிகாரி உள்ளிட்ட சில ஊழியர்கள் பணி செய்ய விடாமல் இடையூறு செய்து தாக்க முற்பட்டதாக கூறி ஆரம்ப சுகாதார வாயிலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்திற்கான காரணம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது உயர் அதிகாரியான மருத்துவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்ததாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் அவர் மீது காவல் நிலையம் மற்றும் துறை அதிகாரிகளுக்கு பல புகார்கள் அளித்ததாகவும் தெரிவித்தார். அத்துடன், தன்னை மருத்துவமனையில் இருந்து தனிமைப்படுத்துவதற்காக ஏனைய ஊழியர்களை அந்த அதிகாரி பயன்படுத்தி வருவதாகவும், தனது உயிருக்கு அச்சம் ஏற்படும் அளவுக்கு சம்பந்தம் இல்லாத நபர்களை வீட்டிற்கு அவ்வப்போது அனுப்பி மிரட்டுவதாகவும் அவர் கூறினார்.

இதனால் வீட்டில் இருந்த தனது குழந்தைக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என எண்ணி தினந்தோறும் பணிக்கு தனது குழந்தையோடு ஆரம்ப சுகாதார துறைக்கு வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் உயர் அதிகாரியின் நெருக்கடி குறித்து தமிழக முதல்வர் பெண்கள் ஆணையம், மனித உரிமை ஆணையம் என உயர்மட்ட அளவில் புகார்கள் அனுப்பியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை எனவும் தனது பிரச்சனைக்கு காரணமானவர்களில் ஒருவரான சுகாதாரத் துறையின் துணை இயக்குனர் மூலமாகவே தனது புகார் தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளதாகவும் தீர்வு கிடைக்காத நிலையில் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் தன்னை கொலை செய்யக் கூடும் எனவும்  தெரிவித்தார்.

பெமிலா ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பணகுடி மருத்துவமனையில் பணியாற்றிய போது அங்குள்ள உயர் அதிகாரியும் தன்னை பாலியல் ரீதியிலும் பல்வேறு வகையில் இடையூறு செய்ததாகவும் அவரும் தற்போதைய தனது உயர் அதிகாரியும் சேர்ந்து தொடர்ந்து தன்னை துன்புறுத்தி வருவதாகவும் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இவர் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில் தொடர்ந்து வாயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com